இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடர், டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி தற்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி தொடர்ந்து அபாரமாக விளையாடி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மூன்று போட்டிகளிலும் இந்தியா 200+ ரன்களை குவித்து அசத்தியது. மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே இந்தியா தொடரைக் கைப்பற்றிவிடும்.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்று டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது.
டி20 தொடர் டிசம்பர் 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 17, 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
அடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரையும், ஜனவரி 3 முதல் 7ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் ரோஹித், கோலி போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என முன்பு கூறப்பட்டிருந்தது.
இந்த இருவரும், கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய டி20 அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பையில் இவர்கள் சிறப்பாக செயல்பட்டும் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இதனால், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இளம் வீரர்கள் தான் விளையாடுவார்கள் எனக் கருதப்பட்டது.
டி20 உலகக் கோப்பை தொடரானது மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதனால், இளம் பேட்டர்களால் காலநிலையை சமாளித்து விளையாடுவது கடினம்.
ஆகையால்தான், டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித், கோலியை விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம். ஆகையால், தென்னாப்பிரிக்க தொடரில் இந்த இருவரும் நிச்சயம் விளையாடுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஓபனர்கள் இடத்தில் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் இருவரும் இருப்பார்கள். மிடில் வரிசையில் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது.
விக்கெட் கீப்பர்கள் இடத்திற்கு கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் இடத்தில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் ஆகியோர் இருக்கிறார்கள். ஸ்பின்னர் இடம் குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.