அமெரிக்க இராணுவத்தின் ஆஸ்பிரே ரக விமானம், ஜப்பானின் தென்பகுதியில் அமைந்துள்ள யாகுஷிமா தீவின் கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவின் கடலோரப் பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் ஆஸ்பிரே ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த விமானம் விபத்தில் சிக்கியது. இது குறித்து கடலோரக் காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து அப்பகுதியில் ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகுகள் மூலம் தேடினர். விமான விபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மேலும் விமானத்தில் இருந்த மற்ற 7 பேரின் நிலைமை தெரியவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுபற்றி ஜப்பான் கடலோர காவல் படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “யமகுச்சி மாகாணத்தில் உள்ள அமெரிக்க மரைன் கார்ப்ஸ் விமான நிலையமான இவாகுனி நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், ஒகினாவாவில் உள்ள கடேனா விமான தளம் நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளானது. கடலில் விழுவதற்கு முன்பாக, யாகுஷிமா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கவும் முயற்சி செய்யப்பட்டது” என்றார்.