உக்ரைனை பனிப்புயல் கடுமையாக தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு குழந்தைகள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதனால், ஆத்திரமடைந்த இரஷ்யா, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது.
இந்த போரினால் இரு நாடுகளும் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. போரில் உக்ரைனின் பல நகரங்களை இரஷ்யா கைப்பற்றியது.
இந்த போரால் உக்ரைன் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நவம்பர் 27-ஆம் தேதி கடுமையான புயல், காற்று மற்றும் பனிப்பொழிவு உக்ரைனின் பெரும்பகுதியைத் தாக்கியது. பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசியதில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.
இதனால், பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பனி புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியான ஒடேசாவை பனிப்புயல் கடுமையாகத் தாக்கியதில், 10 பேர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு குழந்தைகள் உட்பட 23 பேர் காயமடைந்தனர். இந்த பனிப்புயல் தாக்குதலில் இருந்து 2 ஆயிரத்து 500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் இரஷ்யா போராலும், பனிப்புயல் தாக்கியதாலும் உக்ரைன் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.