வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதைத் தொடர்ந்து, கடலூர், நாகை, பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே உருவாகி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டல எதிரொலியாக, சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் இன்று 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.