பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை சந்தித்தார்.
ஐ.நா.வின் பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்றுள்ளார்.
இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார் . ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரஸையும் பிரதமர் சந்தித்துப்பேசினார்.
அதேபோல் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்திப்பது ஒரு பாக்கியம். பரந்த அளவிலான பிரச்சினைகளில் அவரது தொலைநோக்கு தலைமை உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பஹ்ரைனுடனான வலுவான மற்றும் நீடித்த உறவுகளை இந்தியா ஆழமாக மதிக்கிறது. என பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.