பிரதமர் மோடி கலந்துரையாடுதல் மற்றும் கானொலி மூலம் உரையாற்றும் நிகழ்ச்சி புதுச்சேரி அருகே சேலியமேடு கிராம பஞ்சாயத்தில் அரங்கனூர் சமூதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தவர்,
பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதம் என்பது நமது லட்சியம். ‘மோடி கேரண்டி வேன்’ எல்லா கிராமங்களுக்கும் சென்று மத்திய அரசின் திட்டங்களை விளக்கி வருகிறது. பிரதமர் சொன்னது போன்று மூளை முடுக்குகளிலும் கூட மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்திருக்கிறது.
இது போன்ற பயனாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்கும் இன்னும் பல பயனாளிகளை கண்டறிவதற்கும் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் “அம்மா இதற்கு முன்பு ஓலை வீட்டில் இருந்தேன். இப்போது கான்கிரீட் வீட்டில் வசிக்கிறேன். அதற்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தான் காரணம்” என்று கூறினார்.
அதைப்போல இன்னும் தேவைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவற்றைக் கண்டறிவதற்கும் இது உதவுகிறது.
மழைக்கால நடவடிக்கைகளுக்காக காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள் எல்லாம் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே பேச வேண்டாம். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நாம் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.