ஊட்டி- குன்னூர் இடையே இரயில்வே பாதை சரி செய்யப்பட்டு, நேற்று முதல் நீலகிரி மலை இரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 3-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, கல்லார் முதல் அடர்லி இரயில் நிலையம் வரை பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும், தண்டவாள பாதையில் மரங்களும், பாறைகளும் விழுந்தன.
இதன் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரையும், மீண்டும் 9 முதல் 16-ஆம் தேதி வரையும் ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே இரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், கடந்த மாதத்தில் மழை பாதிப்பு தொடர்ந்ததால், 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 8 நாட்கள் ஊட்டி – குன்னூர் இடையிலான மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஊட்டி- குன்னூர் இடையே இரயில்வே பாதை சரி செய்யப்பட்டு விட்டதால், நேற்று முதல் நீலகிரி மலை இரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வருகிற 8-ஆம் தேதி ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே இரயில் சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.