போலி செய்திகளைப் பரப்புவது உண்மையான தகவல்களை மூழ்கடித்துவிடும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் யுகத்தில் சிவில் உரிமைகளை நிலைநிறுத்துதல் தனியுரிமை, கண்காணிப்பு மற்றும் சுதந்திரமான பேச்சு” என்ற தலைப்பில் 14வது நீதிபதி வி.எம். தர்குண்டே நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கோவிட் 19 தொற்றுநோயை எதிர்கொண்டபோது, இணையம் மிகவும் மூர்க்கத்தனமான போலி செய்திகள் மற்றும் வதந்திகளால் நிறைந்திருந்தது. கடினமான காலங்களில் நகைச்சுவை நிவாரணத்திற்கான ஆதாரமாக இருந்தது, ஆனால் சுதந்திரமான பேச்சு வரம்புகளை மறுபரிசீலனை செய்ய நம்மை கட்டாயப்படுத்தியதாக தெரிவித்தார்.
லிபியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி,அமெரிக்கா தேர்தல்கள் மற்றும் பொதுமக்கள் போலி செய்திகளின் பெருக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி கூறினார்.
போலியான செய்திகளால் வன்முறை ஏற்படுவதை செய்தியாக நாம் தினந்தோறும் படித்து வருகிறோம். இணையதளங்கள் வாயிலாக பரவும் போலி செய்திகளை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வேகமாக பரப்பப்படும் பொய் செய்திகள், உண்மையான தகவல்களை நீர்த்துப்போகச் செய்து விடுகிறது. இணையத்தில் பொய்ச் செய்திகள் பரவி வரும் காலகட்டத்தில் பேச்சு சுதந்திரத்தை நிர்வகிக்க புதிய கோட்பாடுகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
அரசிற்கு எதிராக சிலர் தங்கள் கருத்து சுதந்திரத்தை விரிவுபடுத்த பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக நிறுவனங்களை நம்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.