சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு இன்று முதல் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு, கேரளா மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்ப சுவாமி திருக்கோவிலில், மண்டலக் காலத்தையொட்டி, மகரவிளக்கு பூஜைக்காகக் கடந்த 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையொட்டி, ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு இன்று தொடங்கி, ஜனவரி 20-ஆம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு இரயில் (வண்டி எண் – 07305) இயக்கப்படுகிறது.
ஹூப்ளியில் இருந்து காலை, 10:30 மணிக்கு புறப்படும் இரயில், மறுநாள் காலை, 8:15 மணிக்கு கோட்டயம் சென்று சேருகிறது.
மறுமார்க்கமாக, நாளை முதல் ஜனவரி 21-ஆம் தேதி வரை ஞாயிறுதோறும் காலை, 11:00 மணிக்கு கோட்டயத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை, 9:50 மணிக்கு ஹூப்ளி சென்றடைகிறது.
இதேபோல், செவ்வாய்க்கிழமைகளில் ஹூப்ளியில் இருந்து மற்றொரு சிறப்பு இரயிலும் (வண்டி எண் – 07307), புதனன்று கோட்டயத்திலிருந்து சிறப்பு இரயில் (வண்டி எண் – 07308) இயக்கப்படுகிறது.
மேற்கண்ட நான்கு சிறப்பு இரயில்களும் பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், ஒயிட்பீல்டு, பங்காரு பேட்டை, சேலம், ஈரோடு இரயில் நிலையங்களில் நின்று, திருப்பூர், கோவையில் நிற்காமல், இருகூர் வழியாக போத்தனூர் பயணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.