அயோத்தி விமான நிலையம் இந்த மாதம் முதல் செயல்பட தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராம் சர்வதேச விமான நிலையத்தை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, வி.கே.சிங் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அயோத்தி விமான நிலையம் இந்த மாதத்திற்குள் செயல்பட தொடங்கும் என தெரிவித்தார். இந்த விமான நிலையத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 2 முதல் 3 விமானங்களை இயக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த விமானத்தளத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்றும், அப்போது சர்வதேச விமானங்கள் எளிதாக புறப்படும் வகையில், ஓடுபாதையின் நீளம் 2,200 மீட்டரிலிருந்து 3,700 மீட்டராக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், போயிங் 787 போன்ற பெரிய விமானங்கள் இந்த விமான நிலையத்தில் தரையிறங்க முடியும் என்றும், விமான நிலையத்தின் மொத்த பரப்பளவு இரண்டாம் கட்டத்தில் 65,000 சதுர அடியில் இருந்து 5 லட்சம் சதுர அடியாக அதிகரிக்கப்படும் என்றும் சிந்தியா கூறினார்.