வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வருகிற 5-ஆம் தேதி மாலை நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே உருவாகி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கடந்த 1-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும், வலுப்பெற்று, நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது, மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது, 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் 5-ஆம் தேதி மாலை நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் அந்த பகுதிகளில் சுமார் 90 முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலின் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் அநேக இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.