புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் இமயமலையில் பனிப்பாறைகள் அபாயகரமான அளவில் உருகி வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உடனடி உதவி அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளா் ஆண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்திருக்கிறார்.
துபாயில் 28-வது ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் 198 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். மாநாட்டின் ஒரு பகுதியாக மலைப் பகுதி நாடுகளுடனான கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டெரெஸ் பேசுகையில், “நேபாளத்தில் மலைகளை மூடிய பனி கடந்த 30 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு உருகிவிட்டன. அதேபோல, இமயமலையின் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருகின்றன. இது புவி வெப்பமடைந்து வருவதன் நேரடித் தாக்கத்தால் நிகழ்ந்திருக்கிறது.
இதனால், பேரழிவு ஏற்படக் கூடும். நேபாளம் போன்ற பாதிக்கப்படக் கூடிய வளரும் நாடுகளின் தேவையைப் பூா்த்தி செய்ய உடனடி உதவி அவசியம். ஆனால், பருவநிலை மாறுபாட்டால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ வளா்ந்த நாடுகளால் உறுதியளிக்கப்பட்டுள்ள நிதி, தேவையைவிட மிகவும் குறைவாகவே உள்ளது.
எனவே, வளரும் நாடுகளின் தேவைகளை முழுமையாக பூா்த்தி செய்யும் வகையில், சா்வதேச நிதி அமைப்புகள் மற்றும் பன்முக வளா்ச்சி வங்கிகளில் சீா்திருத்தங்கள் அவசியம்.
மேலும், வளரும் நாடுகளின் தேவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதோடு, இன்றைய உலகை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தங்களை வலியுறுத்தும் முடிவுகள், தற்போதைய மாநாட்டில் எட்டப்பட வேண்டும்.
பனிப்பாறைகள் முழுமையாக உருகி விட்டால், சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீரோட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். இது சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு பெரும் இடா்ப்பாட்டை ஏற்படுத்தும். ஆகவே, பனிப்பாறைகள் உருகும் பிரச்னைக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்றாா்.
இக்கூட்டத்தில், நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹல் உள்ளிட்ட பல்வேறு தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இம்மாநாடு டிசம்பா் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.