சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரும் உயிரிழந்து விட்டதாக மாநில அரசு அறிவித்திருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், லோனாக் ஏரிப் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனா, தீஸ்தா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 77 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 2 பேரின் உடல்கள் அடையாளம் தெரியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. ஆனால், இதுவரை மற்றவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை.
எனவே, மேற்கண்டவர்களின் கதி என்ன என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. இந்த சூழலில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், மாயமானவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அனைவரும் இறந்திருக்கக்கூடும் என்று சிக்கிம் தலைமைச் செயலாளர் வி.பி.பதாக் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, மாயமானவர்களின் குடும்பத்துக்கு இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தின் கீழ், மாநில அரசு நிவாரணத் தொகையாக 4 லட்சம் ரூபாயும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.