சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது, மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது, 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும். மேலும் இந்த புயல் வருகிற 4-ஆம் தேதி மாலை நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் அந்த பகுதிகளில் சுமார் 90 முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பால், குடிதண்ணீர், மின்சாரம், மருத்துவம், எரிப்பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான அனைத்து துறைகளும் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.