அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் சேகரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, மக்கள் தரிசனத்துக்காக கோவில் திறந்து விடப்படுகிறது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் நாட்டில் உள்ள பல்வேறு நதிகளில் இருந்து புனிதநீர் சேகரித்து, அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில், தென்பொதிகையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் சேகரித்து கொண்டு செல்லப்படுகிறது.
இதை முன்னிட்டு, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி தீர்த்தக் கட்டத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், தாமிரபரணி நதியில் பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட சிறப்பு பூஜை பொருள்கள் கலந்து வழிபாடு செய்யப்பட்டது. மஹா தீபாராதனைக்குப் பிறகு ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் புனிதநீர் சேகரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.