ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவால், விமானங்கள் மற்றும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் தெற்கு பகுதிகள் பனிப்பொழிவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளின் மேல் பகுதி, தெருக்கள் என எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கின்றன. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களைப் பனி சூழ்ந்து காணப்படுகிறது.
ஜெர்மனியின் முனிச் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால், பேருந்துகள் மற்றும் இரயில்கள் மொத்தமாக ரத்து செய்யப்பட்டன. பொதுப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முனிச் நகரில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ஆம் தேதி முனிச் நகரில் 760 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதிகப்படியான பனிப்பொழிவால் விமான நிலையம் மூடப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பேயர்ன் முனிசி – யூனியன் பெர்லின் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற இருந்த கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெட்பநிலை ஆகியவற்றால், ஜெர்மனியின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.
முனிச் நகரில் கடந்த 1933-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது, மிகக் கடுமையான அளவுக்குப் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.