மத்திய பிரதேசத்தில் தேசிய கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் எனக் கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிக் கொடியை பறக்கவிட்டுள்ளது.
குறிப்பாக, பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில், முற்பகல் 11.25 நிலவரப்படி பாஜக 155 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
காங்கிரஸ் கட்சி 72 இடங்களைப் பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இந்த எண்ணிக்கைகள் கடந்த 2018 தேர்தல் முடிவுடன் ஒப்பிடுகையில், பாஜக 46 இடங்கள் அதிகமாகும். காங்கிரஸ் 42 இடங்களை இழந்துள்ளன.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூரில் பாஜகவினர் வெற்றியைக் கொண்டாடினார். இதற்குக் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பாஜகவினர் தொடர்ந்து வெற்றிக் கோஷமிட்டனர். பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர்.
நிலைமை கைமீறிப்போகும் என்பதை உணர்ந்த போலீசார் கலவரக்காரக்களைக் கலைக்கத் தடியடி நடத்தி கூடத்தைக் கலைத்தனர். இதனால், போலீசார் மீது காங்கிரஸ் கட்சியினர் கல்வீசி தாக்கினர். ஆனால், அவர்களைப் போலீசார் ஓடஓட விரட்டியடித்தனர். இதனால், ஷாஜாபூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.