மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இராணிப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை ‘மிக்ஜாம்’ புயலாக வலுப்பெற்று. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 4-ஆம் தேதி முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். இந்த புயல் 5-ஆம் தேதி முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும்.
இதனால், நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக, இராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.