இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் மாயமாகி உள்ளனர்.
இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில், கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சிமாங்குலாம்பே கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளநீரும், சகதியும் சேர்ந்து அங்கிருந்த வீடுகளை மூழ்கடித்தன. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த 12 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இன்று ஒருவர் உடல் கண்டுப்பிடித்துள்ள நிலையில், 11 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த வெள்ளப்பெருக்கால், ஒரு பள்ளி கட்டடம் உட்பட 12 கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்தன. மேலும், பல குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.