ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்து ஆதரவு அமைப்பான ஸ்ரீராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோகமெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சுகதேவ் சிங் கோகமெடி. ஜெய்ப்பூர் ஷியாம் நகரில் வசித்து வரும் இவர், ஶ்ரீராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா (எஸ்.ஆர்.ஆர்.கே.எஸ்.) அமைப்பின் தலைவராக இருந்தார். இவர், நேற்று மதியம் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென சுகதேவ் சிங் கோகமெடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. பதிலுக்கு சுகதேவ் சிங் ஆட்கள், அக்கும்பல் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலைச் சேர்ந்த ஒருவனும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் பிஜூ ஜார்ஜ் ஜோசப் கூறுகையில், “துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சுகதேவ் சிங் கோகமெடி, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுகதேவ் சிங் கோகமெடி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும், சுகதேவ் சிங் கோகமெடியுடன் பேசிக்கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு, கோகமெடியின் பாதுகாவலர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்திருக்கிறார்.
அதேபோல, இச்சம்பவத்தின்போது பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது பெயர் நவீன் சிங் ஷெகாவத் என்பது தெரியவந்திருக்கிறது. துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடி வருகிறோம்” என்றார்.
சுகதேவ் சிங் கோகமெடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு ராஜ்புத் சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு, கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் படுகொலைக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, சுகதேவ் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ராஜஸ்தானில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.