இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அறிக்கையில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து என்சிஆர்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021 ஆம் ஆண்டை விட 2022 யில் டெல்லியில் 1.25 சதவீதம் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கடத்தல்களும், கொலைகளும், பலாத்கார சம்பவங்களும் அதிகரித்துள்ளன. காதல் விவகாரம் காரணமாக 116 கொலைகள் பதிவாகியுள்ளன. மேலும், 3,909 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 14,158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021 யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் 13,982 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9,782 ஆக இருந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், டெல்லியில் கொலைகள் மட்டுமின்றி, பெண்கள் பலாத்காரம் மற்றும் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. 2022 ஆம் ஆண்டு மொத்தம் 1,204 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 129 வரதட்சணை மரணங்கள் நடந்துள்ளன. கடத்தல் வழக்குகள் 2021 ஆம் ஆண்டு 5,475 ஆக இருந்தது 2022 யில் 5,585 ஆக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கை 2020 யில் 4,011 ஆக இருந்தது, 2022 யில் குழந்தைகளைக் கடத்துவது மட்டுமின்றி பெண்களைக் கடத்துவதும் அதிகரித்துள்ளது. ஒரு வருடத்தில் 3,909 பெண்கள் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லிக்கு அடுத்து பெங்களூருவில் பெண்களுக்கான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.