2023 ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையின் குரூப் சுற்று தொடக்கப் போட்டியில் இந்தியா 4 – 2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியுள்ளது.
ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா குரூப் “சி”யில் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப்பில் இந்தியா, தென்கொரியா, ஸ்பெயின் மற்றும் கனடா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தன் முதல் போட்டியில் தென்கொரியாவை சந்தித்தது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் ஆரைஜீத் சிங் ஹண்டால் அபாரமாக ஆடி போட்டியின் 11, 16 மற்றும் 41வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்தார்.
மேலும், 30வது நிமிடத்தில் இந்திய அணியின் அமந்தீப் மற்றொரு கோலை அடித்தார். மறுபுறம் இந்தியா அடித்த கோல்களை சமன் செய்ய போராடிய தென்கொரியா சார்பில் டோஹ்யுன் லிம் மற்றும் மின்க்வோன் கிம் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஆட்ட நேர முடிவில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் உலகக்கோப்பையில் தன் முதல் குரூப் போட்டியில் வெற்றி பெற்றது. இந்திய ஹாக்கி அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்த்து விளையாடுகிறது.