நாடாளுமன்ற மழைக் காலக்கூட்டத் தொடரில் பேசிய திமுக எம்.பி செந்தில் குமார், இந்தி பேசும் மாநிலங்களை கோ மூத்திர மாநிலங்கள் என்று அழைப்போம் எனத் தெரிவித்தார்.
காரணம், அங்கு நடக்கும் தேர்தல்களில் பாஜகவுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும் எனப் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அவரது இந்தப் பேச்சுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த வட இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
செந்தில் குமாரின் பேச்சுக் குறித்துக் காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்துள்ளார். கோமூத்திர மாநிலங்கள் எனத் திமுக எம்.பி செந்தில் குமார், மக்களவையில் பேசியதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவர் சொந்த கருத்து, நாங்கள் கோ மூத்ராவை மதிக்கிறோம் எனத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ராஜிவ் சுக்லா கூறுகையில், திமுகவின் அரசியல் என்பது வேறு, காங்கிரஸ் கட்சியின் அரசியல் என்பது வேறு.
கோ கோமூத்ரா மீதும், சனாதன தர்மம் மீதும் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. காங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும் மதிக்கும் கட்சி, அரவணைத்துச் செல்லும் கட்சியும் கூட எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒருபடி மேலே சென்றுள்ள சிவகங்கை காங்கிரஸ் எம்.பி, கார்தி சிதம்பரம், திமுக எம்.பி செந்தில் குமாரின் பேச்சு அவமரியாதையானது. அவர், உடனே இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் தாம் பேசிய கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திமுக எம்பி செந்தில் குமாரின் பேச்சுக்கு, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே கண்டனம் தெரிவித்துள்ளது, கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.