பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி, மோசடிகளில் ஈடுபட்ட, வெளிநாட்டு நபர்களால் இயக்கப்படும் 100 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி மோசடிகளில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டன. இவை வெளிநாட்டு நபர்களால் இயக்கப்படுகிறது. கிரிப்டோ கரன்சி, வெளிநாட்டு ஏடிஎம்கள் மற்றும் சர்வதேச ஃபின்டெக் நிறுவனங்களைப் பயன்படுத்தி, பெரிய அளவிலான பொருளாதார மோசடிகளில் ஈடுபடுவது தெரியவந்தது. இந்த இணையதளங்களைத் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ், மத்திய அரசு முடக்கி உள்ளது.
இந்த இணையதளங்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், பெண்கள் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பகுதி நேர வேலைகளைத் தேடுபவர்களைக் குறிவைக்கிறது. இணையதளத்தில் விளம்பரத்தைக் கிளிக் செய்தவுடன், ஒருவர் அவரைத் தொடர்பு கொண்டு உரையாடுகிறார். வேலை தேடுபவர்களுக்கு சில பணிகளைச் செய்யும் படி அறிவுறுத்துவார்.
அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை முடித்ததும், அவர்களுக்கு ஆரம்பத்தில் சிறிய தொகை வழங்கப்படுகிறது. மேலும், அதிக வருமானத்தைப் பெற அதிக முதலீடு செய்யும்படி இணைய நிறுவனம் கூறுகிறது. இதனை நம்பி அதிக பணம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு முதலீடு செய்பவர்கள் பணம் முழுவதுமாக ஏமாற்றப்படுகிறது.
தெரியாத ஒருவர் உங்களை வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டால், சரிபார்ப்பு இல்லாமல் நிதி பரிவர்த்தனைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
குடிமக்கள் தெரியாத கணக்குகள் மூலம் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை பணமோசடி மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதியளிப்பதில் கூட ஈடுபடலாம் என்று மத்திய அரசாங்கம் அறிவுறுத்தயுள்ளது. இதுபோன்ற மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்கள் மற்றும் சமூக ஊடக விவரங்கள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்குமாறு குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.