மத்தியப் பிரதேசம் உட்பட 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கும் நிலையில், முதல்வர்கள் யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. எனினும், புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியான நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றிபெற்றிருக்கிறது.
ஆனால், 3 மாநிலங்களுக்கான முதல்வர்கள் யார் யார் என்பதை பா.ஜ.க. தலைமை இதுவரை அறிவிக்கவில்லை. இதனால், முதல்வர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள பா.ஜ.க.வினர் மட்டுமல்லாது மாநில மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில்தான், 3 மாநிலங்களுக்கும் புதுமுகங்களை முதல்வர்களாக நியமிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, ஏற்கெனவே அங்கு பா.ஜ.க. ஆட்சிதான் இருந்தது. முதல்வராக சிவராஜ் சிங் சௌஹான் இருந்தார். ஆனால், இவர் கடந்த 2003 முதல் 4 முறை முதல்வராகப் பதவி வகித்திருக்கிறார். ஆகவே, இந்த முறை சிவராஜ் சிங் சௌஹானுக்குப் பதிலாக புதுமுகத்தை முதல்வராக பா.ஜ.க. முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில், மத்திய அமைச்சராக இருந்த நரேந்திர சிங் தோமர் அல்லது இணை அமைச்சராக இருந்த பிரஹலாத் சிங் படேல் ஆகியோருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ம.பி. வெற்றிக்கு சிவராஜ் சிங் சௌஹானும் முக்கியக் காரணம் என்பதால், அவருக்கு 5-வது முறையாக வாய்ப்பு அளிக்கப்படலாம் என்கிற தகவலும் உலா வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை, வசுந்தரா ராஜே சிந்தியா முதல் பெண் முதல்வர் என்கிற பெருமையைப் பெற்றவர். ராஜ வம்சத்தைச் சேர்ந்த இவர், ஏற்கெனவே 2 முறை முதல்வராக இருந்திருக்கிறார். எனினும், தற்போது வசுந்தராவுக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் சுமுகமான உறவு இல்லை. இதன் காரணமாக, பா.ஜ.க. வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் வசுந்தரா பெயரே இடம்பெறவில்லை.
எனவே, புதுமுகத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்கிறது பா.ஜ.க. வட்டாரம். அந்த வகையில், ராஜஸ்தானின் யோக் என்று அழைக்கப்படும் பாபா பாலக்நாத் முதல்வராக அறிவிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. இவருக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. எனினும், வசுந்தராவுக்கு 3-வது முறையாக மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்கிற தகவலும் உலா வருகிறது.
அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை, ராமன் சிங் ஏற்கெனவே 2003 முதல் 2018 வரை 3 முறை முதல்வராக இருந்தவர். இவருக்கும் கட்சித் தலைமைக்கும் நல்ல சுமுகமான உறவு நீடித்து வருகிறது. எனினும், ராமன் சிங்குக்கு வயதாகி விட்டது. ஆகவே, இளம் தலைமுறையைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக நியமிக்க கட்சித் தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்த அருண் சாவ், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த கோமதி சாய் ஆகியோர் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படலாம் என்கிறார்கள். இது தொடர்பாக, கட்சித் தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. எனினும், கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக அனைவரும் தெரிவித்திருக்கிறார்கள்.