தமிழ் சமூகத்தைத் தொடர்ந்து இழிவு படுத்தும் தொடர் குற்றவாளிதான் திமுக எம்பி செந்தில் குமார் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசுவின் கோமியமும், சாணமும் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளது. இதை பன்னெடுங்காலத்திற்கு முன்பாகவே அறிந்திருந்த தமிழர்கள் அனுதினமும் அதிகாலையில் பசுவின் சாணம் தெளித்து வாசல் மெழுகி கோலமிட்டு வீட்டை அழகுபடுத்துவதன் மூலம் சுத்தம் சுகாதாரத்துடன் ஆன்மீகத்தையும் இணைத்து இன்று வரையிலும் தனித்துவ பாரம்பரியமாக தமிழர்கள் கடைபிடித்து வருகிறார்கள். பசுவும் கன்றும் மங்கள அடையாளங்கள், பசுவையும் கன்றையும் போற்றி வணங்கும் தெய்வங்களாக கருதுவது தமிழர் பண்பாடு, பசுவையும் காளையையும் வணங்குவதெற்கென்றே மாட்டுபொங்கல் கொண்டாடும் உன்னத பண்பாடு கொண்டது தான் தமிழர்தம் பண்பாடு. அதனாலேயே ஜல்லிக்கட்டு உலகபிரசித்தி பெற்ற விழாவாக உருவெடுத்துள்ளது.
அப்படிப்பட்ட தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட தருமபுரி மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் Dr.செந்தில்குமார் மக்களவையில் பேசியபோது பாஜக வெற்றி பெறும் மாநிலங்கள் கோமூத்ர மாநிலங்கள் என்று குறிப்பிட்டு பேசியுள்ளது, தமிழர்களின் பண்பாட்டையும் நீண்ட நெடிய நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் செயலாகும், நாட்டு நலனுக்கும் தொகுதி வளர்ச்சிக்கும் உழைக்கவேண்டிய மக்கள் பிரதிநிதி தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயலில் அதுவும் மக்களாட்சியின் கோயிலாக கருதபடும் மக்களவையிலேயே ஈடுபடுவது மக்களவையின் மாண்பையும் மக்களாட்சி தத்துவத்தையும் இழிவுசெய்யும் செயல் என்றால் மிகையில்லை.
திமுக தேர்தலின்போது 90% இந்துக்கள் உள்ள கட்சி என்று பசுத்தோல் போர்த்திக் கொண்டு வாக்கு பிச்சை பெறுவதும் வெற்றி பெற்றபின்னர் தன் சுய ரூபத்தை காட்டி இந்துகளையும் இந்துக்களின் வழிபாடு நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி வதைப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதை சமீப காலங்களில் மக்கள் மிக தெளிவாக உணர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் தருமபுரி மக்களவை உறுப்பினர் Dr.செந்தில்குமார் திமுகவின் இந்து விரோத நரித்தனத்தை அதி தீவிரமாக செயல்படுத்தும் முன்னோடியாக இருக்கிறார்.
அரசியல் தளத்தில் மாற்று கட்சியினரை விமர்சிப்பதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கையில் பெரும்பான்மை மக்களின் சமய நம்பிக்கையை வாழ்க்கை முறையை கொச்சைபடுத்தி பேசுவது கடும் கண்டனத்துகுரியதும் அவசியமற்ற திமிர்தனமான பேச்சாகும்.
அந்த வகையில் ஒரு நல்ல அரசியல்வாதியாகவும், தன்னை தேர்வு செய்த மக்களின் பாரம்பரியங்களை மதிக்கும் நல்ல மக்கள் பிரதிநிதியாகவும் கூட Dr.செந்தில்குமார் செயல்படவில்லை என்பது அவரை தேர்வு செய்த மக்களுக்கும் மக்களாட்சிக்கும் செய்யும் மாபெரும் துரோகம்.
அவர் பேச்சுக்கு X தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது ஆனால் Dr.செந்தில்குமார் அவர்கள் தொடர்ந்து பெரும்பாண்மை இந்து சமூகத்தின் தமிழ் சமூகத்தின் நம்பிக்கைகளை கொச்சைபடுத்துவதை வாடிக்கையாக கொண்டவர் . அரசு விழாக்களில் பூமி பூஜைக்கான வழிபாட்டு பொருட்களை எட்டி மிதிப்பது, சிவபெருமானை குடும்ப கட்டுப்பாடு செய்தவரா என பேசியது என ஒவ்வொரு முறையும் நச்சு வாசகங்களை பேசிவிட்டு மன்னிப்பு கோருவதும் வருத்தம் தெரிவிப்பதும் வாடிக்கை என்பதால், அவர் தமிழ் சமூகத்தை தொடர்ந்து இழிவு படுத்தும் தொடர் குற்றவாளி என்பதே நிதர்சனம். ஆதலால் இந்து முன்னனி பேரியக்கம் தருமபுரி மக்களவை உறுப்பினர் Dr.செந்தில்குமார் கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், எதிர்வரும் தேர்தலில் அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் இவர் போல ஏராளமானவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கும் தகுந்த படிப்பினையை எதிர்வரும் தேர்தலில் கொடுக்க வேண்டும் இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுகொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.