கோவை சரவணம்பட்டியில் பிரபல நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2023-2024 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது கல்வி கட்டணம் ரூ.1,20,000 என்றும், அதனை 4 தவணைகளாகச் செலுத்தலாம் எனக் கூறி மாணவர் சேர்க்கை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதில், ஏராளமான மாணவர்கள் இணைந்துள்ளனர். இந்த நிலையில், மாணவர்கள் நடப்பாண்டு கட்டணமாக 1,20,000 ஆயிரத்தில் முன்பணமாக ரூ.40 ஆயிரத்தை செலுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, முதல் பருவ கட்டணத்தைச் செலுத்தும் மாணவர்களை மட்டுமே வகுப்புகளுக்குள் அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால், கட்டணம் கட்ட முடியாத 6 மாணவ, மாணவிகள் கடந்த சில நாட்களாகக் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி ஒருவரின் தந்தை கல்லூரி நிர்வாகத்தினரை சந்தித்து, இது குறித்து கேட்டபோது, கல்லூரி நிர்வாகம் காவலாளியை வரவழைத்து தரக்குறைவாகப் பேசி அவரை வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி பேராசிரியரையும், காவலாளியையும் பணி நீக்கம் செய்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று தொடர்ந்து முழக்கம் எழுப்பினர்.
மேலும், இரண்டாம் ஆண்டிற்கான கட்டணத்தை முதலாம் ஆண்டிலேயே கட்டினால்தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும், கட்டணம் செலுத்த தவறும் மாணவ, மாணவிகளுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.50 முதல் 300 வரை அபராதம் என்கிற பெயரில் கட்டணக் கொள்ளை அடிப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.