உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பதவிகளில் இந்திய இளைஞா்கள் இருக்கின்றனா். இது தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி நமது இளைஞா்களின் மேலாண்மை மற்றும் வணிகத் தலைமைத் திறனை எடுத்துரைக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பெருமிதம் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் லக்ஷ்மிபத் சிங்கானியா கல்வி அறக்கட்டளை மற்றும் ஐ.ஐ.எம். லக்னோ இணைந்து ‘தேசிய தலைமைத்துவ விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்துகொண்டு வெற்றியாளா்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய திரௌபதி முா்மு, “நமது இளைஞா்கள் சுயதொழில் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டதால் உலகின் 3-வது அதிக எண்ணிக்கையிலான ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பதவிகளில் இந்திய இளைஞா்கள் இருக்கின்றனா்.
இது தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி நமது இளைஞா்களின் மேலாண்மை மற்றும் வணிகத் தலைமைத் திறனை எடுத்துரைக்கிறது. ‘அமிா்த காலத்தில்’ இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றும் இலக்கை மனதில் வைத்து புதிய பாடத்திட்டத்தை ஐ.ஐ.எம். லக்னோ போன்ற கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.
மேலும், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்காக நமது மேலாண்மை நிறுவனங்களின் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். ஆராய்ச்சிப் படிப்புகளில் வெளிநாட்டின் வணிகங்களைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிப்பது போல, இந்தியா மற்றும் அதன் பன்னாட்டு நிறுவனங்களைப் பற்றிய ஆய்வுகளை சமா்ப்பிக்குமாறு மாணவா்களை ஊக்குவிக்க வேண்டும்.
அதேபோல, இந்தியாவை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி இதழ்களில் நமது மேலாண்மை நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மாணவா்களும் ஆராய்ச்சியாளா்களும் அணுகக் கூடிய வகையில் திறந்த அணுகல் தளத்தில் கிடைக்கும் இந்திய ஆராய்ச்சி இதழ்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், தலைமைத்துவ ஆய்வுகள் குறித்த விவாதத்தையும் உருவாக்கி இருக்கிறது. இது ‘நெருக்கடி சமயத்தில் தலைமை மற்றும் குழுப் பணி’ என்கிற தலைப்பிலான ஆராய்ச்சிக்கு மிகவும் பொருத்தமான நிகழ்வாகும்.
தொழில்நுட்பத்தின் புதுமையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கத்தால் பணியை இழந்துவிடுவோம் என்ற அச்சம் அனைவரிடமும் நிலவுகிறது. ஆனால், செயற்கை நுண்ணறிவை முறையாக பயன்படுத்த கற்றுக்கொண்ட யாருக்கும் வேலை இழக்கும் அபாயம் இருக்காது.
இது ஒருபுறம் இருக்க, உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் அதிகரிப்பதற்கு நிலவிய கண்மூடித்தனமான போட்டியால் உருவான பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீா்கேடு சவால்களுடன் உலகம் தற்போது போராடி வருகிறது.
‘லாபத்தை அதிகரிப்பது’ என்னும் வா்த்தக உத்தி மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், இந்திய கலாச்சாரத்தில் இந்த கருத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. மாறாக, தொழில்முனைவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.