ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டம் மும்பையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் விவரித்தார்.
அப்போது, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், 6.5 சதவீதமாக தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி தொடர்பான கணிப்பானது, முந்தைய 6.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் நிறைவடையும் காலாண்டுகளுக்கான வளர்ச்சி முறையே 6.5 சதவீதம் மற்றும் 6 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துவதற்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் கூறினார்.