மெக்சிகோவில் நேற்று பிற்பகல் 2.03 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், உலகின் சில நாடுகள் நிலைகுலைந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இதேபோல், நவம்பர் 3-ஆம் தேதி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மெக்சிகோவில் நேற்று பிற்பகல் 2.03 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோ நகரத்திற்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சியாட்லா டி டா டாபியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 44.4 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் உணரப்பட்டது. அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அங்குள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் குலுங்கின.
இதனால், வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து, பூகம்ப எச்சரிக்கைகள் ஒலித்தன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியகாவில்லை.