நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, தொழிலதிபர் ஹிராநந்தன் என்பவரிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மஹூவா மொய்த்ராவின் நண்பரான வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் டெஹாத்ராய் மற்றும் பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே ஆகியோர் புகார் கூறினார்.
மேலும், இது தொடர்பாக நிஷிகாந்த் துபே, நாடாளுமன்றத்தில் புகார் செய்தார். இதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். அதன்படி, நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை மஹூவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை அறிக்கையை மக்களவையில் இன்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையைில் மஹூவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. இந்த சூழலில், இன்று மக்களவை கூடியதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கு ஆதரவு தெரிவித்து எதிர்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து, மக்களவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். பின்னர், பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய விவாதத்தின் முடிவில், மஹூவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.