திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு எதிராக, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என பாஜக எம்பி தரம்பிர் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி. தரம்பிர் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பெற்றோர், உறவினர்களால் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணமே நீண்ட காலமாகப் பின்பற்றப்படுகிறது.
ஜோடிப் பொருத்தம், சமூக மற்றும் தனிமனித மதிப்பீடுகள், குடும்பப் பின்னணி உள்பட பல்வேறு பொதுவான காரணிகளின் அடிப்படையில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால், காதல் திருமணங்கள் அப்படி அல்ல. காதல் திருமணங்கள் அதிகரித்துள்ளது. அதனால், விவாகரத்தும் அதிகரித்துள்ளது.
நமது நாட்டில், விவாகரத்து விகிதம் 1.1 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவில், அது 40 சதவீதமாக உள்ளது.எனவே, நமது நாட்டில் காதல் திருமணம் செய்ய வேண்டும் என்றாலும் கூட இருவீட்டாரின் சம்மதத்தை நிச்சயம் பெறவேண்டும் என தனி சட்டம் கொண்டு வரவேண்டும்.
நமது சமூகத்தில், லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்ற பெயரில், திருமணம் செய்து கொள்ளாமல் சில ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் புதிய கலாசாரம் மிக வேகமாகப் பரவி வருகிறது. இது மிக மேசமான விளைவுகளை ஏற்படுத்தும். நமது கலாசாரத்தைச் சீர்குலைப்பதோடு, சமூகத்தில் வெறுப்புணர்வையும், தீய எண்ணங்களையும் பரப்பிவிடும்.
எனவே, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு எதிராக, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தவறான கலாசாரத்தை ஒழிக்கமுடியும் என அவர் தெரிவித்தார்.