காசியில் டிசம்பர் 17 -ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்களை இயக்க உள்ளது.
உலகம் போற்றும் கலாச்சார மையங்களாக ஜொலித்து வரும் தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் வகையில், பாரதப் பிரதமர் மோடி உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் 16 -ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து 2,500-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு 8 நாட்கள் சுற்றுப் பயணம் செய்தனர். அப்போது, வாரணாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி மிகச் சிறந்த அனுபவங்களைப் பெற்றனர்.
இந்த நிலையில், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின்கீழ் காசி தமிழ் சங்கமம் 2-வது கட்ட நிகழ்வை மார்கழி மாதத்தின் முதல் நாளான வரும் டிசம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு இரயில் இயக்க உள்ளது.
சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூரில் இருமார்கங்களிலும் காசிக்குச் சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளது.
















