ராஜமுந்திரி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்திற்கு டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து, எஃகு அமைச்சர் ஜோதிராதித்யா எம். சிந்தியா, ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் 2023 டிசம்பர் 10 -ம் தேதி அன்று சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் முன்னிலையில் அடிக்கல் நாட்டவுள்ளனர்.
இதன் மூலம் கூடுதலாக 17,029 சதுர மீட்டர் பரப்பளவில் விமான நிலையத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராஜமுந்திரி விமான நிலைய விரிவாக்கம் ரூ.350 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
விரிவாக்கத்திற்குப் பிறகு முனையக் கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 21,094 சதுர மீட்டராக இருக்கும், இது நெரிசல் நேரங்களில் 2100 பயணிகளுக்கும், ஆண்டுக்கு 30 லட்சம் பயணிகளுக்கும் சேவை செய்யும் திறன் கொண்டதாக அமையும்.
ஹைதராபாத், சென்னை, பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களுடன் இணைக்கப்பட்ட ராஜமுந்திரி விமான நிலையம் தற்போது வாரத்திற்கு 126 விமானச் சேவைகளை கையாளுகிறது.
விமான நிலையத்தில் சுமார் 600 கார்களை நிறுத்தும் வகையில் மேம்படுத்தப்படும்.
விமான நிலையத்தின் புதிதாக மேம்படுத்தப்பட்ட முனையக் கட்டிடம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
இது விமான இணைப்பை மேம்படுத்துவதோடு, இங்கு வரும் பயணிகள் மேம்பட்ட பயண வசதிகளின் பயனைப் பெறுவார்கள். இது பிராந்தியத்தின் தொழில் மற்றும் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.