புரட்சியாளர்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்து வருவதாக வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்களில் ஒருவர் வீர சாவர்க்கர். அந்தமான் சிறையில் இவர் அனுபவிக்காத துன்பங்களே இல்லை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட தலைவரை, காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அவதூறகப் பேசிவருவதோடு, அவமதித்தும் வருகின்றனர்.
இந்த சூழலில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், அம்மாநில சட்டமன்றத்தில் இருந்து சாவர்க்கர் உருவப்படத்தை அகற்றுவேன் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே கூறியிருக்கிறார்.
அதாவது, கர்நாடகாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரியங்க் கார்கே, “சாவர்க்கரின் சித்தாந்தம் வெறுப்பைத் தூண்டும் வகையில் இருக்கிறது. எனவே, கர்நாடக சட்டமன்றத்தில் இருந்து சாவர்க்கரின் உருவப்படத்தை அகற்றுவது சரியானது. அனுமதித்தால் அதை அகற்றுவேன்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கேவின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மும்பை மற்றும் நாக்பூரில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வீர சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாகவே வீர் சாவர்க்கரையும், புரட்சியாளர்களையும் துஷ்பிரயோகம் செய்து வருகிறது” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.