கடந்த 4-ஆம் தேதி சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறி, கடந்த 5-ஆம் தேதி தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே கரையைக் கடந்தது.
இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு இடங்களில் கடந்த 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக, சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், இரண்டு, மூன்று நாட்கள் மின்சாரம், பால், தண்ணீர், உணவு இல்லாமல், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் குறிப்பாக, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.