2018-ஆம் ஆண்டு முதல் இதுவரை வரை, வெளிநாடுகளில் தங்கி படித்து வந்த 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதிகபட்சமாக கனடாவில் 91 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இதுவரை 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக கனடாவில் 91 இந்திய மாணவர்கள் இறந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் 48 மாணவர்களும், ரஷ்யாவில் 40 மாணவர்களும், அமெரிக்காவில் 36 மாணவர்களும், ஆஸ்திரேலியாவில் 35 மாணவர்களும், உக்ரைனில் 21 மாணவர்களும், ஜெர்மனியில் 20 மாணவர்களும், சைப்ரஸில் 14 மாணவர்களும், இத்தாலியில் 10 மாணவர்களும் மற்றும் பிலிப்பைன்சில்10 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.
வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, இந்திய தூதரக அதிகாரிகள், பல்கலைக் கழகங்களுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். இந்திய தூதரக அதிகாரிகள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.
விபத்துகளில் சிக்கும் மாணவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ சிகிச்சை, தங்குமிடம் ஆகியவை தூதரகங்கள் மூலமாக வழங்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.