கர்னி சேனா அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 3 பேரும் டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்ரீராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா என்கிற அமைப்பின் தலைவராக இருந்தவர் சுக்தேவ் சிங் கோகமெடி. இவர், கடந்த 5-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டில் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, மர்ம நபர்கள் 3 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில், சுக்தேவ் சிங் கோகமெடி உயிரிழந்தார். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களில் நவீன் சிங் ஷெகாவத் என்பவரும் கொல்லப்பட்டார். அதேசமயம், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மற்ற 2 பேரும் தப்பிச் சென்று விட்டனர்.
இச்சம்பவம் ராஜபுத்திர சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கோகமெடியின் கொலையைக் கண்டித்து ராஜஸ்தான் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தால் ராஜஸ்தானில் பதற்றம் நிலவியது.
இதையடுத்து, கோகமெடி கொலையில் தொடர்புடைய நபர்களை போலீஸார் தேடி வந்தனர். இந்த சூழலில், ராஜஸ்தான் போலீஸாரின் கூட்டு நடவடிக்கை காரணமாக ரோகித் ரத்தோர், நிதின் பவுஜி உள்பட 3 முக்கிய குற்றவாளிகளை சண்டிகரில் வைத்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
3 பேரும் டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே, கோகமெடி கொலை வழக்கில் பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றிருக்கிறது. இக்கும்பல்தான் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவைக் கொலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.