செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்து உள்ளதால், ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 1,500 கன அடியிலிருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் கடந்த 5-ஆம் தேதி மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.
கனமழையால், சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
அந்த வகையில், 24 அடி நீா் உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்டம் 22.64 அடியாக உள்ளது. ஏரிக்கு வரும் நீரின் அளவு 1,000 கன அடியாக உள்ளது. இந்த நிலையில், இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.