தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, இந்த மாதம் தொடக்கம் முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 5 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் ஸ்ரீவை குண்டம் அணை கட்டு பகுதிகள் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் திருநெல்வேலி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றுக்கு செல்வோர் கவனமாக இருக்குமாறும், முடிந்த அளவு கரையோரம் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.