பத்திரிகையாளர்களின் ஆசானும், சமூகப் புரட்சியாளரும், தேசப் பக்தர்களின் முன்னோடியும், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞனாக விளங்கிய மாபெரும் போராளியான மகாகவி பாரதியார், கடந்த 1882 ஆம் ஆண்டு இதே நன்னாளில் தான், எட்டயபுரத்தைச் சேர்ந்த சின்னசாமி சுப்ரமணிய ஐயர்- இலக்குமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
1897 ஆம் ஆண்டு பதினான்கரை வயதான பாரதிக்கு 7 வயதான செல்லம்மாவுடன் திருமணம் நடைபெற்றது. 16 வயதில் தன் தந்தையை இழந்த பாரதி 1898 ஆம் ஆண்டு காசிக்குச் சென்றார்.
அங்கு ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்த அவர், யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழின் பெருமையை தரணிக்கு எடுத்துரைத்தார்.
தன் வாழ்நாள் முழுவதும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், பெண் அடிமைத்தனம், ஜாதிய கொடுமைகள் உட்பட பல அடக்குமுறைகளுக்கு எதிராக, எழுத்துகளால் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளராக, பாரதியார் திகழ்ந்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனது பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்திய பத்திரிகையாளர்களில் பாரதியார் முதன்மையானவர். இந்திய பத்திரிகை உலகில் கார்ட்டூனை முதலில் அறிமுகம் செய்தவர்.
சமூக நலனுக்காகப் பாடுபட விரும்பும் இன்றைய பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் முன்னோடியான அவரின் பங்களிப்பை வணங்கி போற்றுவோம்.