வால்பாறையில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைகள், புலிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில், வால்பாறை அமைந்துள்ளது. அதனால் இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களில், யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட கொடிய வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
கடந்த வாரம், வால்பாறை நகர் கோ-ஆப்ரெடிவ் காலனியில், நள்ளரவில் மூன்று சிறுத்தைகள் நடமாடின. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு, வால்பாறை அடுத்துள்ள அய்யர்பாடி ரோப்வே எஸ்டேட் பகுதி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில், புலி ஹாயாக ரோட்டில் நடந்து செல்வதை, அந்த வழியாகச்சென்ற சுற்றுலா பயணியர் படம் எடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வால்பாறையில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளில் இரவு தங்கும் சுற்றுலா பயணியர், வனவிலங்குகளை பார்ப்பதாக கூறி வெளியிடங்குகளுக்கு, அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.