ஜம்மு காஷ்மீருக்கு விரைவாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் மூத்த தலைவரும், காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்கின் மகனுமான கரண் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்றும் மேலும், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் கரண் சிங்,
”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். மத்திய அரசு என்ன செய்ததோ அது சட்டப்படி செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு விரைவாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள குறிப்பிட்ட சிலருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்காது. அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால், இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எதிர்மறை எண்ணங்களை விடுத்து தேர்தலை எதிர்கொள்வதற்கு மக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.