2023 ஆம் ஆண்டில் இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார் என்பது குறித்து கூகுள் நிறுவனம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதிக தேடப்படுபவர் பட்டியலை ஆண்டுதோறும் கூகுள் நிறுவனம் பட்டியலாக வெளியிடும். இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெற்றதால் இரசிகர்கள் அதிகமாக கிரிக்கெட் சார்ந்த நபர்களையே தேடியுள்ளனர். இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஆறு இடத்தை கிரிக்கெட் வீரர்களே பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி உள்ளார். இரண்டாம் இடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இடம் பிடித்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வீரர்களாக இருப்பவர்கள் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா. ஆனால் அவர்கள் இந்த பட்டியலில் இல்லை என்பது தான் ஆச்சர்யமாக உள்ளது.
மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா. நடப்பு உலக கோப்பை தொடரில் 500 ரன்கள் மேல் அடித்து பட்டையைக் கிளப்பினார் ரச்சின் ரவீந்தரா. இதனால் அவர் குறித்து இந்திய ரசிகர்கள் அதிகமாக தேடியுள்ளனர்.
நான்காம் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உலகக்கோப்பை தொடரில் ஷமி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தனி ஆளாகப் பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தந்ததால் இவரைப் பற்றி ரசிகர்கள் கூகுளில் அதிக அளவில் தேடியுள்ளனர்.
ஐந்தாவது இடத்தில் இருப்பவர் யூடியூபர் எல்விஷ் யாதவ். ஆறாவது இடத்தில் உள்ளவர் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா. ஏழாம் இடத்தில் இருப்பவர் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல்.
இந்த பட்டியலில் 8 வது இடத்தில இருப்பவர் கால்பந்துவீரர் டேவிட் பெக்கம். இவர் இந்த உலகக் கோப்பை தொடரை பார்க்க வந்ததால் அவரும் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் இந்தியா கிரிக்கெட் வீரர், டி20 கிரிக்கெட்டின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பவர் உலகக்கோப்பை தொடர் ஃபைனலில் அசத்திய டிராவிஸ் ஹெட் தான். அதிரடியாக விளையாடி சதம் அடித்தார், இதன் மூலம் அவர் குறித்தும் இந்திய ரசிகர்கள் அதிகமாக தேடியுள்ளனர்.