இத்தாலியில் நேற்று இரவு இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 17 பயணிகள் படுகாயமடைந்தனர்.
இத்தாலியில் நேற்று இரவு பாயின்சா – ஃபோர்லின் நகரங்களுக்கு இடையே அதிவேக ரயிலும், பிராந்திய ரயிலும் நேருக்கு மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 17 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினரும், ரயில்வே துறையினரும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இத்தாலி ரயில் சேவை ட்ரெனிட்டாலியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ரயில்கள் மிகவும் மெதுவாக வந்து மோதிக்கொண்டதால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது 17 பயணிகளுக்கு சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளன. ரயில்கள் மோதிக்கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இந்த ரயில் விபத்தில் தீயணைப்பு துறையினர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இரு ரயில்களின் இன்ஜின்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக விரைவு ரயில் இன்ஜின் மோதியதில் பிராந்திய ரயிலின் இன்ஜின் கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து இத்தாலி போக்குவரத்துத் துறை அமைச்சர் மெட்டோ சால்வினோ கூறுகையில், “ரயில் விபத்துக்கு பிறகு நிலைமையை கண்காணித்து வருகிறேன்.
விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, மிலன் – துர்னின் இடையே இரவு நேரத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 5 ரயில்வே ஊழியர்கள் மீது ரயில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.