ராஜஸ்தான் முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக, மத்தியப் பார்வையாளர்கள் தலைமையில் இன்று மாலை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வெளியாகின. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
ஆனாலும், 3 மாநிலங்களுக்கான முதல்வர்களை தேர்வு செய்வதில் குழப்பம் நிலவியது. முன்னாள் முதல்வர்கள் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்திருந்தது. இதுதான் தாமதத்துக்குக் காரணமாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, 3 மாநில முதல்வர்களை தேர்வு செய்வதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோர் தலைமையில் மத்தியப் பார்வையாளர்கள் குழுவை பா.ஜ.க. தலைமை நியமித்தது.
இதைத் தொடர்ந்து, முதலில் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் குழு கடந்த 10-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாய் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் பிறகு, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் குழு நேற்று மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தியது. இதில், அம்மாநில முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வரை தேர்வு செய்வதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் இன்று அம்மாநிலத்துக்குச் செல்கிறார்கள். தொடர்ந்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், புதிய முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும்.