திபெத் புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, 13 வருட இடைவெளிக்குப் பிறகு 3 நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்துக்கு வருகை தந்திருக்கிறார்.
திபெத் புத்த மதத் தலைவராக இருப்பவர் 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ. 87 வயதான இவர், 3 நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்துக்கு வருகை தந்திருக்கிறார். கிழக்கு சிக்கிமில் உள்ள லிபிங் இராணுவ ஹெலிபேட் தளத்துக்கு வந்திறங்கிய அவரை, மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார்.
மேலும், அவருக்கு பல்வேறு புத்த மதத் துறவிகள், புத்த மத வழக்கப்படி ஷெர்பாங் பாடலைப் பாடியும், நடனமாடியும் சிறப்பாக வரவேற்புக் கொடுத்தனர். தொடர்ந்து, தலாய் லாமா காங்டாக்கில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றார். அவரைக் காண நெடுஞ்சாலையின் இரு புறமும் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
இன்று இந்தியா மற்றும் சீன எல்லையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள பால்ஜோர் மைதானத்தில் தலாய் லாமா போதனை செய்கிறார். இந்நிகழ்ச்சியில் தலாய் லாமாவிடம் ஆசி பெற சுமார் 40,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், 3 நாள் பயணத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தங்கியிருக்கும்போது “போதிசத்துவர்களின் 37 நடைமுறைகள்” பற்றிய போதனைகளை வழங்குகிறார். தொடர்ந்து, காங்டாக் மாவட்டத்தில் உள்ள சிம்மிக் காம்டாங் தொகுதியில் கர்மபா பார்க் திட்டத்தின் அடிக்கல்லை நாட்டுகிறார்.
இது குறித்து சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “தலாய் லாமாவுக்கு என்னுடைய அன்பான வரவேற்பை வழங்கி, மரியாதை செலுத்தியதைப் பாக்கியமாகக் கருதுகிறேன். அவருடைய ஆழ்ந்த போதனைகள் மற்றும் முன்மாதிரியான வழிகாட்டுதல்கள் நம் இதயத்தையும், மனதையும் வளப்படுத்துகிறது. ஆசீர்வதிக்கப்பட்ட சிக்கிம் பூமிக்கு அவரை வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தலாய் லாமா கடைசியாக 2010-ம் ஆண்டு சிக்கிம் மாநிலத்துக்கு வந்திருந்தார். கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் சிக்கிம் வருவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், பெரும் வெள்ளம் காரணமாக தலாய் லாமாவின் சிக்கிம் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.