இரண்டு மாதங்களில் ஈரானில் இருந்து சுமார் 3 இலட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி, அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் டிசம்பர் 8-ஆம் தேதி வரை, ஈரானில் இருந்து சுமார் 3 இலட்சத்து 45 ஆயிரம் ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஈரானிய படைகளால் ஆப்கான் அகதிகள் தவறாக நடத்தப்பட்டதாக சிலர் புகார் அளித்தனர்.
இதுகுறித்து ஆப்கானியர் ஒருவர் கூறியதாவது, ஆப்கானிஸ்தானில் எந்த வேலையும் இல்லை. இதனால், நாங்கள் சட்டவிரோத பாதைகள் வழியாக ஈரானுக்குச் சென்றோம். அவர்கள் எங்களை அடித்துத் தடுத்து நிறுத்தினர். எங்களைத் திரும்பும்படி கட்டாயப்படுத்தினர்.
ஆப்கானிஸ்தானில் வேலைவாய்ப்பு இல்லாதது குறித்து ஆப்கன் அகதிகள் கவலைகளை தெரிவித்தனர். மேலும், குடிமக்களுக்கு வேலைகளை உருவாக்க தாலிபான் அரசு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.