சென்னையில் பெய்த கனமழையால், பல இடங்களில் சாலைகள் உள்வாங்கி வாகன விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேடவாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் பெய்யும் மழைநீர், சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் சாலையைக் கடந்து, ஒக்கியம்மடு வழியாக, பக்கிங்காம் கால்வாயை அடைந்து, அங்கிருந்து முட்டுக்காடு செல்கிறது. இதற்கு, 8 கிலோமீட்டர், வரை சுற்றுகிறது. இதனால், சோழிங்கநல்லுார் – மேடவாக்கம் சாலையில் இருந்து, நேராக பக்கிங்காம் கால்வாயை அடையும் வகையில், மூடு கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டது.
இந்த பணிக்காக, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மொத்தம், 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கு, நீளம் 10 அடி, அகலம் 8 அடி ஆழத்தில் மூடு கால்வாய் அமைகிறது. தொடங்கும் மற்றும் முடியும் இடத்தில் பணி முடிந்தது. இதற்கு இடைப்பட்ட, சோழிங்கநல்லூர் சந்திப்பில், மெட்ரோ இரயில் பணி நடப்பதால், ‘ப’ வடிவில் மூடு கால்வாய் மாற்றி கட்டமைக்கப்பட உள்ளது.
சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து பக்கிங்காம் கால்வாய் செல்லும் கே.கே.சாலையில், துண்டுதுண்டாக பணி நடக்கிறது. மிக்ஜாம் புயல் காரணமாக, பெய்த கனமழையால், கால்வாயை ஒட்டியுள்ள தார்சாலை உள்வாங்கி சரிந்து விழுந்தது. இதனால், அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், மதுரவாயல் மேட்டுக்குப்பம் பிரதான சாலை, மின்வாரியம் அலுவலகம் அருகே, திடீரென சாலை உள்வாங்கி, இராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படாமல் தவிர்க்க, அந்த பள்ளத்தைச் சுற்றி ஜல்லிக்கற்கள் கொட்டி, தடுப்பு அமைத்துள்ளனர். இதேபோல், பல இடங்களில் சாலைகள் உள்வாங்கி உள்ளதால், வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.