மிக்ஜாம் புயல், பெருவெள்ளம் பாதிப்பினால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளின் புத்தகங்கள், சான்றிதழ்கள் ஆகியவை மழை நீரில் சேதம் அடைந்தது. இதனால், பலரும் வேலை வாய்ப்பு, கல்வி நிலையங்களில் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகக் கல்வி சான்றிதழ் இல்லாமல் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்குக் கட்டணமின்றி நகல்களைப் பெற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்களின் நகல்களை mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் பதிவு செய்யலாம் என்றும், சான்றிதழ்களின் விபரங்களைப் பதிவு செய்த பின்னர், அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும் என்றும்,இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800 425 0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.